சுற்றுலா செல்கிறீர்களா?- அறிந்துகொள்ள ஆயிரம் இருக்கிறது!

By காமதேனு

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை முடிய இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன. பெரும்பாலும், நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் நம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்லலாமா என்று யோசித்ததுமே, எங்கு செல்வது என்பதில் தொடங்கி தங்குவது, உண்பது, சுற்றிப் பார்ப்பது வரை ஏகப்பட்ட கேள்விகள் முளைக்கும். எல்லாவற்றுக்கும் ஒரே பதில்... எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால், அது மனதையும் சூழலையும் கெடுக்காத ஆக்கபூர்வமான சுற்றுலாவாக அமையட்டும்!

உதாரணத்துக்கு, நீலகிரிக்குச் சுற்றுலா செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நீலகிரியைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தினசரி 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி நாட்களில் தினசரி ஒன்றரை லட்சம் பேர் குவிகின்றனர். தாங்குமா பூமி? ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, கொடநாடு காட்சி முனை, பைக்காரா அருவி, பைக்காரா படகு இல்லம், முதுமலை வனச்சரணாலயம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி ரோஜாப்பூங்கா என இவர்கள் வருகை புரியும் எந்த இடமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியே இருக்கிறது. இங்கெல்லாம் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கட்டாயம் தவிருங்கள்.

குறிப்பாகக் குரங்கினங்கள், காட்டு மாடு, மான்கள் ஆகிய விலங்குகளுக்குத் தின்பண்டங்கள் அளிக்கக் கூடாது. காரணம், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே தின்பண்டங்களுக்குப் பழகிப்போன மேற்கண்ட விலங்கினங்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

பெரும்பாலானவர்கள் காலையில் ஊட்டிக்கு வந்தால், மாலைக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு ஊருக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். அப்படி அல்லாமல் சூழலையும், அதன் பழங்குடிகளையும், அவர்களின் மகத்துவத்தையும் ஒட்டியே யோசித்துச் சுற்றுலாவை அமைத்துக்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE