பீகார் மாநிலத்தின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று மதுபானி ரயில் நிலையம். மதுபானி என்பது ஊரின் பெயர் மட்டுமல்ல, அங்குள்ள பாரம்பரிய ஓவியக் கலையின் பெயரும் ஆகும். அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்திருந்த இந்த ரயில் நிலையத்தில், இப்போது மதுபானி ஓவியங்களால் புத்தொளி வீசுகிறது. 14 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 200 கலைஞர்கள், கட்டணம் எதுவும் வாங்காமல் இரண்டு மாத உழைப்பைச் செலுத்தி இந்த ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தியுள்ளனர். இவர்களில் 80% பெண்கள். இந்த ஓவியங்களால் ’தேசத்தின் மிகத் தூய்மையான ரயில் நிலையம்’ என்ற புகழை அடைந்துள்ளது மதுபானி ரயில் நிலையம்.