நூலரங்கம்:  துயர் பேசும் நிஜ மனிதம்

By காமதேனு

அன்பு நிறைந்த மனிதர்கள்தான் அனைவருமே. ஆனாலும், சின்ன வலிக்கும், சிறிய அலட்சியத்துக்கும், சின்ன சொல்லுக்கும்தான் குமைந்துபோகிறார்கள். மனித மனங்களின் அபிலாஷைகளை, அந்தரங்கத் துயரத்தை எவ்விதப் பூச்சுமின்றி வெளிப்படுத்தும் நந்தன் ஸ்ரீதரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘நந்தலாலா’. கதையாசிரியர் சினிமாவில் பணிபுரிவதாலேயே, தொகுப்பின் ஒன்பது கதைகளில் நான்கு கதைகள் சினிமா சார்ந்து வருகின்றன.

பொதுவாகச் சிறுகதைகளில் படிமங்கள் வழி காட்சி நகர்த்தல் இருக்கும். உரையாடல்களில் சுவாரசியம் இருக்காது. ஆனால், நந்தனுக்கு உரையாடல் மிகப் பிரமாதமாக வருவதால், எல்லாத் தாக்கத்தையும் அப்படியே கடத்துகிறார். அதையும் மீறி கவிதை தென்பட்டுவிடுகிறது. பசி குறித்த கதையில் ‘பசியெனும் சிங்கப்பல் கொண்ட யானை தன் கூரிய நகத்தால் என் தலையை வருடியபடி இருந்தது’ என்ற வரியை ரசித்துவிட்டுக் கடந்துவிட முடிவதில்லை. ‘தோற்றவளின் கடைசி சொற்கள்’ என்னும் கதை முழுக்கவே பச்சைக் கவிச்சி ரகம்! உண்மை அப்படித்தானே இருக்கும். நந்தனுக்குத் துயரங்கள் மூலமே மனிதர்களை ஞாபகப்படுத்தும் எழுத்து வாய்த்திருக்கிறது. ‘செத்து செத்து வாழ்பவன்’ என்ற கதை முழுவதும் நகைச்சுவையாக நகர்ந்தாலும், கடைசிப் பத்தியில் ஈஸ்வரன் சொல்லும் “நல்லா சம்பாதிக்கிறேன். யாருக்குன்னுதான் தெரியல’’ என்ற இடத்தில் சட்டென்று வேறுவித மவுனத்துக்குள் செல்கிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நந்தலாலா’வில், கடைசியில் அகல்யாவுக்கு ஞாபகம் வரும், வாசகரிடம் சொல்லாத சொல்தான் கதையின் பலம். பேருந்து நிலையத்தில் சந்திக்கும் மனநிலை தவறியவனும், மது விடுதியில் சந்திக்கும் ஒருவனும் மற்றொருவனின் வாழ்வில் என்னவாகிறார்கள் என்று உணர்வுக் குவியலாய் சொல்லும் கதைக்கு ஏன் அப்படி ஒரு தலைப்பு? கதாசிரியர் முதல் பக்கத்தில் அறிமுகப்படுத்தும் நபரை வெறுக்க ஆரம்பித்து மூன்றாம் பக்கத்தில் அவரையே நேசிக்க வைக்கும் அளவுக்கான வித்தியாச எழுத்துப் பிரவாகம். ‘எனது அறையில் ஓர் உடும்பு இருக்கிறது’ தொகுப்பின் சிறந்த கதை. பால்யத்திலிருந்து பசியின் கொடுமையை விவரித்துப் போகும் ஒருவன், கடைசியில் ‘எனது புலி பசித்தாலும் மானுடரைக் கொல்வதில்லை’ என்பதிலிருந்து கதாசிரியர் பேச விழைவதெல்லாம், மனிதம் மட்டுமே என்பது புரிகிறது.

விலை: 120

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE