வாட்ஸ் அப் மூலம் மாற்றுத்திறனாளி கோரிக்கை: ஒரே நாளில் செங்கல்பட்டு ஆட்சியர் நடவடிக்கை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (39). இவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் சத்திய மூர்த்திக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதற்கு மேல் இவரால் இனி ஒன்றும் செய்ய முடியாது என முடிவெடுத்த இவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதனையடுத்து தனது தாயின் அரவணைப்பில் இருந்து வரும் சத்தியமூர்த்தி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப் படும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வைத்து பிழைத்து வருகிறார். இந்நிலையில், தனக்கு வசிப்பதற்கு சொந்த வீடு இல்லை என்றும், தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர உதவ வேண்டும் என சத்தியமூர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் நேற்று தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் சத்திய மூர்த்தியின் உண்மை நிலவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இன்று சத்திய மூர்த்தியை நேரில் சந்தித்து அவருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.

அத்துடன், இன்னும் இரண்டு மாதங்களில் சத்தியமூர்த்திக்கு ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டித் தரவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், அவருக்கு தேவையான மின்சார அடுப்பு சமைப்பதற்குத் தேவையான குக்கர் ஆகியவற்றையும் ஆட்சியர் வழங்கினார். அப்போது செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்லிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE