மதுரையைச் சேர்ந்த இளம் புகைப்படக் கலைஞர் பழனிகுமாரின் ‘நானும் ஒரு குழந்தை’ என்ற புகைப்படக் கண்காட்சி கடந்த ஆண்டு சென்னை லலித் கலா அகாடமியில் நடந்தது. துப்புரவு மற்றும் கையால் மலம் அள்ளும் தொழி லாளர்களின் வலி நிரம்பிய வாழ்க்கை பிரதிபலித்த அந்தக் கண்காட்சி பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டு, மும்பை தாராவியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் பள்ளியில், அம்பேத்கர் பிறந்தநாளில் பழனிகுமாரின் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புகைப்படக் கலையை இந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வடிவமாகத் தேர்ந்தெடுத்தது எப்படி?
அரசுப் பள்ளி மாணவர்கள், மலைப் பகுதிகளில் வாழும் மக்களின் குழந்தைகளுடன் தொடர்ந்து பழகிவருகிறேன். கேமரா வாங்கியதுமே, எனக்குப் பிடித்த அந்தக் குழந்தைகளைப் படம் பிடிக்கத் தொடங்கினேன்.
அந்த நேரத்தில்தான், திவ்யபாரதியின் ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. கையால் மலம் அள்ளும் மக்களும், அவர்களின் குழந்தைகளும்தான் அதன் மையம். ஒரு கலை, மக்களுக்கானதாக மாறும்போதுதான் அது முழுமையடைவதாக உணர்ந்ததால், தொடர்கிறேன்.