ஏசி சிலீப்பர் சார்... இப்ப கிளம்பிடும் சார்!

By காமதேனு

‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’ன்னு யாராச்சும் சொன்னா, “ஷ்ஷ்ஷ்... யப்பா” என்று பெருமூச்சுவிடுறது வழக்கமாகிடுச்சி. சத்தியமா ரயில் டிக்கெட் கெடைக்காது. அரசுப் பேருந்தா, ஆம்னி பஸ்ஸான்னு முடிவெடுக்கிறதுக்குள்ள கண்ணக் கட்டிடும். அரசுப் பேருந்துல போனா, பெரும்பாலும் சீட்டை சாய்க்க முடியாது, சாய்ச்சா நிமிர்த்த முடியாது. கை வெக்கிற ஸ்டாண்ட்டும் இருக்காது, தண்ணிக்கேனை செருகுற பையும் இருக்காது.

புழுங்குதேன்னு ஜன்னலைத் திறக்க முடியாது. குளிருதேனு மூட முடியாது. கடமுடகடமுடன்னு சத்தம்தான் கேட்குமே தவிர, வண்டி மெல்லத்தான் போகும். நட்டநடு ராத்திரியில ‘மோட்டல்’ங்கிற பேர்ல ஒரு மரணக்கிடங்குல அடிச்சி இறக்கிவிடுவாங்க.

எதுக்கு வம்புன்னு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனாப் போதும். “வாங்க சார், சென்னை சார், சிலீப்பர் சார், ஏசி சார், 6 மணி நேரம்தான் சார்”னு ஒரே நேரத்துல பத்திருபது பேர் கையைப் பிடிச்சி இழுப்பாங்க. “அந்தா நிற்குது பாருண்ணே, அந்த பஸ் தான்”னு சொல்லி டிக்கெட் தருவாங்க. அப்புறம்தான் தெரியும், ஸ்ரீதேவி படத்தைக் காட்டி கவுண்டமணியை செந்தில் ஏமாத்துனது மாதிரி, நம்மையும் அந்த ஏஜென்ட் பையன் ஏமாத்திட்டான்னு.

எவ்வளவு உஷாரா இருந்தாலும், நம்மை ஈஸியா ஏமாத்திடுவாங்க. “சென்னையா சார்”னு கேட்கிறவர்கிட்ட, “இல்லண்ணே பெங்களூர்”னு சொல்லித் தப்பிச்சிடலாம்னு பார்த்தா, “வாங்கண்ணே அதுவும் நம்ம பஸ்தான்”னு சொல்லி வலுக்கட்டாயமா ஏத்தியே விட்ருவாங்க. ஒரு தடவை, “அண்ணே நடுவுல சீட் இருக்கா?”ன்னு கேட்டேன். ஆமான்னு சொல்லி ஏத்திட்டானுங்க. ஏறுனப் பிறகுதான் தெரிஞ்சுது அவர் சொன்னது, கடைசி வரிசையில நடு சீட்டுன்னு. “யோவ், என்னய்யா இது?”ன்னு கேட்கிறதுக்குள்ள அந்தாளு ‘எஸ்’ ஆயிட்டாப்டி.  “எனக்குத் தெரியாது”ன்னு கைய விரிச்சிட்டாரு டிரைவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE