வக்பு மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி ஆதரவு அளித்ததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆதரவு அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த கட்சியின் மூத்த தலைவர் முகம்மது காசிம் அன்சாரி, சிறுபான்மையினர் அணி மாநிலச் செயலாளர் முகம்மது ஷாநவாஸ் மாலிக் ஆகிய இருவரும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மதச்சார்பற்ற பாதையில் கட்சி பயணிப்பதாக நம்பி வந்த முஸ்லிம்கள் தற்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஷாநவாஸ் மாலிக் எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் முற்றிலும் மதச்சார்பற்ற சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்பவர் என எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கை தற்போது சிதைந்துவிட்டது. வக்பு சட்டத் திருத்தம் தொடர்பான ஜேடியுவின் நிலைப்பாட்டால் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள இந்திய முஸ்லிம்களும் எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
காசிம் அன்சாரி எழுதியுள்ள கடிதத்தில், “இந்த சட்டத்திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது. இதனை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜேடியு செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், “காசிம் அன்சாரி, ஷாநவாஸ் மாலிக் ஆகிய இருவரும் கட்சியின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பில் இருப்பவர்கள் அல்ல. எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் குலாம் ரசூல் பலியாவி போன்ற சில உண்மையான உறுப்பினர்கள் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அவர்களின் குறைகள் உகந்த முறையில் தீர்க்கப்படும்” என்றார்