இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: மகிழ்ச்சி செய்தி!

By சி.பிரதாப்

சென்னை: விண்வெளியில் வலம்வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை (UnDocking)வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன.

இவ்விரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அதன்பின் அந்த விண்கலன்கள் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. தொடர்ந்து விண்கலன்கள் இடையேயான தூரத்தை படிபடியாக குறைத்து ஜனவரி 16-ம் தேதி அவை இரண்டும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது.

இதையடுத்து இரட்டை விண்கலன்களுக்கு இடையே மின் எரிபொருள் பரிமாற்றம் மற்றும் விண்கலன்களை பிரித்தல் (Undock) ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக நேற்று விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. மேலும், விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்களும் வெளியாகின. இது அறிவியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமான விண்கலன்களுக்கு இடையேயான மின் எரிபொருள் பரிமாற்றம் பரிசோதனை குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து வரும் நாட்களில் மீண்டும் விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மின் எரிபொருள் பரிமாற்றம் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE