1,000+ ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது ஓலா - காரணம் என்ன?

By KU BUREAU

மும்பை: பவிஷ் அகர்வாலின் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் 1,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், ஒப்பந்த பணியாளர்களும் அடங்குவர்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்த ஓலா நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளால் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால், கடந்த டிசம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் இழப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், தற்போது அந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, ஓலா நிறுவனம், கடந்த நவம்பரில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், ஐந்து மாதங்களுக்குள் மேலும் 1,000+ பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஓலா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “நிறுவனம் மறுசீரமைக்கப்படுகிறது. வாடிக்கையாளர் தொடர்புடைய செயல்பாடுகள் தானியங்கு முறையில் மாற்றியமைக்கிறது. செலவுகளை குறைக்கவும், சிறந்த உற்பத்தி திறனை பெறுவதற்காக தேவையற்ற பணியாளர்களை நீக்கி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

எனினும், எவ்வளவு பேர் வேலையிலிருந்து நீக்கப்பட உள்ளனர் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஓலா நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலானது. ஆனால், தற்போது அதன் பங்கின் விலை உச்சத்திலிருந்து 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் முதலிடத்தில் இருந்த ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தற்போது மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே பஜாஜ் மற்றும் டிவிஎஸ் மோட்டார் உள்ளதாக இந்திய அரசின் வாகன பதிவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE