மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய பெண் அமைச்சரின் மைனர் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக பதவி வகிப்பவர் ரக்சா காட்சே. மகாராஷ்டிராவில் இவரது மைனர் மகள் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தனது பாஜக ஆதரவாளர்களுடன் சென்று காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து ரக்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் கோதாலி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க எனது மகள் தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கிருந்த ஆண்கள் சிலர்எனது மகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு மத்திய அமைச்சரின் மகளுக்கே இந்த நிலை என்றால் மகாராஷ்டிராவில் சாதாரண பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது. நான் ஒரு தாயாக எனது மகளுக்கு நியாயம் கேட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மத்திய அமைச்சராகவோ அல்லது எம்.பி.யாகவோ நான் இந்த புகாரை கொடுக்கவில்லை. மாநில அரசு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் குஷாந்த் பிங்டே கூறுகையில், ” இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டுள்ளனர். தடுக்க வந்த பாதுகாவலர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் ஏழு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
» தவெக பெயரில் விஷம கருத்துகளை திணிக்க முயற்சி: பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம்
» பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து அக்கட்சியைச் சேர்ந்த மத்திய பெண் அமைச்சர் ஒருவரே கேள்வியெழுப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தை தீவிரமாக கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.