மகா கும்பமேளா: கண்ணை கவரும் லேசர் வாணவேடிக்கைகளுடன் நிறைவு; பிரமிப்பில் உறைந்த பக்தர்கள்!

By KU BUREAU

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற பிரம்மாண்டமான மகா கும்பமேளே நிகழ்வில் 66.21 கோடி பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த மிகப்பெரிய நிகழ்வின் கடைசி நாளான நேற்று இரவு, நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கைகளுடன் பக்தர்களை பிரமிக்க வைத்தது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். பல்வேறு அகாராக்களைச் சேர்ந்த துறவிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த விழாவின் கடைசி நாளான நேற்று, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் மகா கும்பமேளா புனித நீராடலில் 66.21 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

மகா கும்பமேளாவின் கடைசி நாளான நேற்று மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்படுவதைக் காட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காட்சிகளில், லேசர் ஒளி நிகழ்ச்சியுடன் வானத்தை வர்ண ஜாலத்துடன் ஒளிரச் செய்யும் வாணவேடிக்கைள் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மக்கள் திரள் கலந்துகொண்ட மகா கும்பமேளா, மகா சிவராத்திரியான நேற்று பிரயாக்ராஜில் நிறைவடைந்தது.

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் உட்பட மக்கள் புனித திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிப்ரவரி 7 முதல் 10 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை, நடன கலை நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டனர். பாவங்களைப் போக்கவும் மோட்சத்தை அடையவும் வழி வகுப்பதாக நம்பப்படும் ஷாஹி ஸ்னான் என்னும் முக்கிய சடங்கை முன்னிட்டு லட்சக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.

ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள், கூடாரங்களை அமைத்து மகா கும்பமேளா நடைபெற்ற பகுதி, தற்காலிக நகரமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அலைகடலென மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கும்பமேளா பகுதியைச் சுற்றி சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. துணை ராணுவப் படையினர், 14,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 50,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன், 2,750 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தடையற்ற போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய பிரயாக்ராஜ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பக்தர்களின் வருகையைக் கையாள இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜிற்கு தேவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ 1000 ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி) ஆகியவற்றைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் முக்கிய நிலையங்களில் பணியமர்த்தப்பட்டர். ட்ரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் போன்றவை அமைக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE