வேளாண் துறை வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது: விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியை விடுவித்து பிரதமர் மோடி பெருமிதம்

By KU BUREAU

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் வேளாண் துறை வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதுவரை விவசாயிகளுக்கு 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் நேற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பிஹார் மாநிலம் பாகல்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவிப்பதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து இன்று விவசாயிகளுக்கான 19-வது தவணையை விடுவித்துள்ளோம்.

பிஎம் கிசான் நிதி திட்டம், விவசாயிகளுக்கு "மரியாதை, வளர்ச்சி, செழுமை மற்றும் புதிய பலம்" ஆகியவற்றை அளித்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சியில் வேளாண் துறை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதுவரை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.3.5 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதித்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை, சிறு விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. இதனால் அவர்களது செலவுகள் குறைந்து, வருமானம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் விடுவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE