குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 68 நகராட்சிகளில் 60-ஐ அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
குஜராத்தில் ஜுனாகத் மாநகராட்சி, 68 நகராட்சிகள் மற்றும் 3 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 68 நகராட்சிகளில் 60-ஐ கைப்பற்றியுள்ளது. மேலும் ஜுனாகத் மாநகராட்சி மற்றும் 3 தாலுகா பஞ்சாயத்துகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
பாஜக இம்முறை 10-க்கும் மேற்பட்ட நகராட்சிகளை காங்கிஸ் கட்சியிடமிருந்து பறித்துள்ளது. 2022 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலை தொடர்ந்து அக்கட்சியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பாஜகவுடனான குஜராத்தின் பிணைப்பு உடைக்க முடியாதது மட்டுமல்ல, இது நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது" என்றார்.
இத்தேர்தலில் பிராந்திய கட்சியான சமாஜ்வாதி 2 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சலயா நகராட்சியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 28 இடங்களில் காங்கிரஸ் 15 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து 13 இடங்களுடன் ஆம் ஆத்மி இரண்டாமிடம் பெற்றுள்ளது. கடந்த 2018 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 14 நகராட்சிகளை கைப்பற்றியிருந்தது.
ஜுனாகத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 48 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியினர் 11 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர்