‘மரண மேளா’ ஆகிவிட்டது மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி கருத்தால் சலசலப்பு

By KU BUREAU

கொல்கத்தா: கும்பமேளா மரண மேளா ஆகிவிட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதில் கடந்த மாதம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் இறந்தனர். இதையடுத்து டெல்லி ரயில் நிலையத்தில் அண்மையில் பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் இடம்பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் இறந்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “மகா கும்பமேளாவை நான் மதிக்கிறேன். ஆனால் அது மரண மேளா ஆகிவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கையை பாஜக அரசு குறைத்து கூறுகிறது. முறையான திட்டமிடல் இல்லை. பணக்காரர் மற்றும் விஐபிக்களுக்கு ரூ.1 லட்சத்தில் முகாம் கிடைக்கிறது. ஏழைகளுக்கு போதிய ஏற்பாடுகள் இல்லை. கூட்ட நெரிசல் வழக்கமாக உள்ளது” என்றார். மேலும் பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக மாநில பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “கும்பமேளா குறித்து மம்தா விமர்சனம் செய்கிறார். இதற்கு இந்து சமூகத்தினரும், துறவிகளும் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இந்துக்களுக்கு எதிரான இந்த தாக்குதலை அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்துக்கள் கண்டிக்க வேண்டும். வலுவாக குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

மம்தா பேசியது குறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “அரசியல் ரீதியான கருத்து குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் அரசியலில் இல்லை. அந்த கருத்தின் தன்மை அரசியல் சார்ந்து உள்ளது. இது அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல. இந்த புனித நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மனித நேயம் மற்றும் தேசத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE