ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகருக்கு ஜாமீன்

By KU BUREAU

அக்ஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விவிஐபி.,மக்களின் பயணத்துக்காக அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை 556.262 மில்லியன் யூரோவுக்கு வாங்க கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெற இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார். இவருடன் சேர்ந்து கிடோ ஹாஸ்கே மற்றும் கார்லோ ஜெரோசா என்பவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இந்த ஊழல் காரணமாக மத்திய அரசுக்கு ரூ.2,666 கோடி இழப்பு என சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கிறிஸ்டியன் மைக்கேல் அகெஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.225 கோடி பெற்றார் என அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாலும், ஆனால், இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியாமல் இருப்பதாலும் கிறிஸ்டியன் மைக்கேலை விசாரணை நீதிமன்றத்தின் நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE