தலைநகரில் கடும் பதற்றம்; டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் பலி - நடந்தது என்ன?

By KU BUREAU

புதுடெல்லி: உ.பியில் நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.

“டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் காபந்து முதல்வர் ஆதிஷி நேரில் வந்து பார்த்தனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடைமேடை எண் 13 மற்றும் 14-ல் நடைமேடையில் மக்கள் தங்களது உடைமைகளை விட்டுச் சென்றது அப்படியே இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளனர. ட்ராலி, தண்ணீர் பாட்டில், காலணி போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கிறது.

நடந்தது என்ன? - சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடெல்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸார், காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE