லக்னோ: உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஜீப்பும், பேருந்தும் மோதிக் கொண்டதில், மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக ஜீப் ஒன்றில் புறப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் அந்த ஜீப் சென்று கொண்டிருந்தபோது, மத்தியப் பிரதேசத்தில் இருந்து பக்தர்களுடன் வந்த பேருந்து மீது வெள்ளிக்கிழமை இரவு மோதியது. இந்த விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்; 19 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும், உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதியுடன் கும்பமேளா முடிவடைகிறது. இங்கு புனித நீராட தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால் இங்கு விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.
கடந்த மாதம் 29-ம் தேதி மகா கும்பமேளா புனித நீராடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயம் அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன் மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய ஆந்திர பக்தர்கள் சென்ற பேருந்து மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.