டாப் 10 செய்திகள்: புதிய வருமான வரி மசோதா முதல் மோடியின் ‘தைரியம்’ மீதான கேள்விகள் வரை

By KU BUREAU

புதிய வருமான வரி மசோதா அறிமுகம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான வியாழக்கிழமை எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை மீறி, புதிய வருமான வரி மசோதவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, இந்த மசோதாவை மக்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மக்களவையின் முதல் அமர்வு நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக, வருமான வரிச் சட்டம் 1961-ஐ எளிமைப்படுத்தும் வகையில், வருமான வரிச் சட்ட மசோதா-2025 தாக்கல் செய்யப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். மேலும், மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் சட்டத்தின் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில் வரிக் கொள்கைகளில் எவ்வித முக்கிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் வகையில், வரி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மும்முனை அணுகுமுறையுடன் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. வாசிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிக்கலான மொழிநடை தவிர்க்கப்பட்டுள்ளது. எளிதில் கண்டறிய வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ள விதிப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க வசதியாக இருக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் தர்க்க ரீதியாக மறுசீரமைக்கப்படடுள்ளன’ என்று மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

வக்ஃபு மசோதா கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்: வக்ஃபு வாரிய சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காக வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால், இந்த சட்ட திருத்த மசோதா, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை, அதில் உறுப்பினராக உள்ள பாஜக எம்.பி மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது, அதிருப்தி கருத்துகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதான அவதூறு கருத்துகள் மட்டுமே நீக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

“அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது” - சேகர்பாபு: அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்காமல் விடமாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பேசியிருந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி அதன் செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு - அண்ணாமலை: “தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. இதனைத் தடுக்கவோ, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், மிகுந்த பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எப்போதுதான் தனது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்?” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்: “பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், காவல் துறை, சமூக நலத்துறை மூலம் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வுகளுடன், பாலியல் புகார் தொடர்பாகவும் ஜூன் மாதத்தில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி அரசியல் செய்ய இடமளிக்கக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

திமுக வாக்குறுதிகள் - வெள்ளை அறிக்கை கோரும் பாமக: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் போர்: பேச்சு நடத்த ட்ரம்ப், புதின் ஒப்புதல்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடி உள்ளார். இதனை தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் நாடுகளின் பலங்களைப் பற்றியும், ஒன்றாகச் செயல்பட்டால் கிடைக்கும் பெரும் நன்மைகளைப் பற்றியும் பேசினோம்.

முதலில், நாங்கள் இருவரும் ரஷ்யா- உக்ரைன் போரில் நடக்கும் லட்சக் கணக்கான இறப்புகளை நிறுத்த விரும்புகிறோம். எனவே, இந்த விஷயம் தொடர்பாக இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளோம். அவர்கள் இந்த உரையாடல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

ஆர்சிபி கேப்டன் ஆனார் ரஜத் பட்டிதார்: அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரை நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். கோலி மீண்டும் கேப்டன் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமெரிக்க உளவுத் துறை தலைவருடன் மோடி சந்திப்பு: அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை காலை வாஷிங்டனில் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்தார். இது தொடர்பாக மோடி தாது எக்ஸ் பக்கத்தில், ‘அவருடன் இந்திய - அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பிடம் இதையெல்லாம் கேட்பாரா மோடி? - காங்கிரஸ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

‘அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர சொந்த விமானத்தை அனுப்புவது குறித்து பேசுவாரா? இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்தியாவின் ஒட்டு மொத்த கோபத்தை அதிப்ர் ட்ரம்பிடம் தெரிவிக்கும் தைரியம் பிரதமருக்கு உள்ளதா?’ என்று அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றவர்கள் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்திய இளைஞர்கள். இவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ட்ரம்பிடம், மோடி கூறவாரா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE