புதுடெல்லி: டெல்லி தேர்தலுக்கு முன்னாக ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் பாஜக பேரம் பேசியதாக குற்றம் சுமத்திய ஆம் ஆத்மி தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் பாஜக தலா ரூ.15 கோடி பேரம் பேசியதாக ஆத் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால், மூத்த தலைவர்கள் முகேஷ் அலாவட், சஞ்சய் சிங் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
அரவிந்த கேஜ்ரிவால் கடந்த 6-ம் தேதி அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு 55 இடங்கள் கிடைக்கும் என சில நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. அப்படியென்றால், அந்த கட்சி எங்கள் வேட்பாளர்களிடம் பேரம் பேச வேண்டிய அவசியம் என்ன? சில வேட்பாளர்களை இழுப்பதற்காக, இதுபோன்ற போலி கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது மக்களை வஞ்சிக்கும் செயல். எங்கள் எம்எல்ஏ.க்களில் ஒருவர் கூட இந்த பேரத்துக்கு அடிபணிய மாட்டார்கள்” என்றார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி அரவிந்த் கேஜ்ரிவால், முகேஷ் அலாவட், சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 7-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
அதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 16 பேரிடம் பேரம் பேசப்பட்ட விவரங்களையும், பேரம் பேசியது யார் என்ற விவரத்தையும், ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அவற்றை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நோட்டீஸுக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.