திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் முர்மு

By KU BUREAU

பிரயாக்ராஜ் கும்பமேளாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, தரைக்கு கீழ் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது.

வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஏற்கெனவே மகா கும்ப மேளாவில் புனித நீராடினர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று காலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார். அவரை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பின்னர் மூவரும் அங்கிருந்து திரிவேணி சங்கமத்துக்கு மிதவை படகில் பயணித்தனர். அப்போது பறவைகளுக்கு உணவு அளித்தனர். இதையடுத்து தண்ணீரில் இறங்கிய திரவுபதி முர்மு புனித நீராடினார்.

பின்னர் இந்து மதத்தில் அழியாத அடையாளமாக கருதப்படும் படே ஹனுமன் கோயில் மற்றும் அக்சயவத் மரம் ஆகியவற்றில் திரவுபதி முர்மு பிரார்த்தனை செய்தார். இவரது வருகையை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்கத்து மாநிலங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகரை நோக்கி செல்லும் சாலைகளில் சுமார் 300 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுவரை 44 கோடி பேர் புனித நீராடி உள்ளதாகக் கூறப்படுகிறது.

முந்தைய மகா கும்பமேளாவின்போது, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அதன் பிறகு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய 2-வது குடியரசுத் தலைவர் என்ற பெருமை முர்முவுக்கு கிடைத்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE