டாப் 10 செய்திகள்: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி முதல் ‘மகா கும்பமேளா’ 300 கி.மீ டிராஃபிக் வரை

By KU BUREAU

ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இரு தரப்பும் எழுத்துபூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என மறுப்பு தெரிவித்தால், அதை அப்போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். முக்கியமான அரசியல் சாசன பதவியை வகிக்கும் ஆளுநர் தனது நிலைப்பாட்டை தெளிவாக அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும். மசோதாக்களில் ஆட்சேபம் இருந்தால் ஆளுநர் இவ்வளவு காலம் அமைதி காத்தது ஏன்?’ என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதிமுகவில் சலசலப்பும், செங்கோட்டையன் விளக்கமும்: அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த விழாவுக்கான அழைப்பிதழில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறாததை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் செங்கோட்டையன் சுட்டிக்காட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, கோவையில் நடந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பில் சர்வ கட்சியினரும் உள்ளனர், எனவே அந்த நிகழ்ச்சியை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்: தமிழக சட்டப்பேரவையில் விரைவில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கு தற்போதைய திமுக அரசு 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேர் கைது - திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொம்மில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ வினய் காந்த் சவுடா, திண்டுக்கல் தனியார் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் - புதிய வழக்கு: திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவித்து பராமரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், தமிழக தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 கோடி ஏழைகள் பாதிப்பு - சோனியா காந்தி: மாநிலங்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பே இன்னமும் பின்பற்றப்படுகிறது. பயனாளிகளுக்கான ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், சுமார் 14 கோடி ஏழை மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் புனித நீராடல்! - உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார். இதற்காக திங்கள்கிழமை அதிகாலை பிரயாக்ராஜுக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.

ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! - டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகா கும்பமேளா: 300 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் - மகா கும்பமேளா விழாவின்போது புனித நீராட பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி மகாகும்பமேளா விழா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் புனித நீராட நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். வரும் 26-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கு வரும் சாலைகள், கட்டுக்கடங்காத வாகனங்களால் திணறுகின்றன. இதனால் திங்கள்கிழமை 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக, உ.பி.யையொட்டி அமைந்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் 7 மாவட்ட நுழைவு வாயில்களில் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு பயணி கூறும்போது, “வாகனப் போக்குவரத்து நெரிசலில் கடந்த 48 மணி நேரமாக வாகனங்கள் சிக்கிக் கொண்டன. 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு 10 முதல் 12 மணி நேரமாகிறது” என்றார்.

அதிக அளவில் பக்தர்கள் வருவதால் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி குல்தீப் திவாரி கூறும்போது, “அதிக அளவில் பக்தர்கள் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE