புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு உயிர் இருந்தால், அது நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி வருகிறோம். மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்கள் எங்களுக்குத் தேவை. ஏனெனில், மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள் கழித்து அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்குள், 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும் வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது. வாக்காளர் பட்டியலை எங்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ தவறு இருக்கிறது, அது அவர்களுக்குத் தெரியும் என்பதே அதற்கு ஒரே காரணம்.
தேர்தல் ஆணையத்துக்கு உயிர் இருந்தால், அது ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும். அரசியலமைப்பை முற்றிலுமாக அழிக்கும் பாதையை நோக்கி செல்வதைப் பார்க் கிறோம். எனவே, அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பணி முக்கியம்" என்று ராகுல் காந்தி கூறினார்.
» டாப் 10 செய்திகள் - ‘இந்தியர்களுக்கு கைவிலங்கு’ விவகாரம் முதல் கிருஷ்ணகிரி அதிர்ச்சி வரை
» அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்: 205 பேர் விமானம் மூலம் பஞ்சாப் வந்தனர்!