‘இந்தியர்களுக்கு கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த அவர்கள், பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எதிரொலித்தது.
நாடாளுமன்றத்தின் கடும் அமளி: அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றப்படுவது இது முதல்முறை கிடையாது. முன்னாள் அதிபர் பைடன் ஆட்சியில் 1,100 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் தற்போது இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. ராணுவ விமானத்தில் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வந்துள்ளனர். அவர்களை பயணிகள் விமானத்தில் கவுரமாக திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்” என்றார்.
பிரியங்கா காந்தி கூறும்போது, “பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் நண்பர்கள் என்று கூறுகிறார்கள். அப்படியிருக்கும்போது இந்தியர்களை அவமரியாதையாக நடத்த அனுமதிக்கலாமா? இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “சிலர் தங்களை உலகின் மிகச் சிறந்த தலைவர் என்று கூறி கொள்கின்றனர். அவர்கள் இப்போது மவுனமாக இருக்கின்றனர்” என்று சாடினார்.
மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்தார்.
அதில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
வழக்கமாக விமான போக்குவரத்தின்போது பரிமாறப்படும் உணவு வகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கழிப்பறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு இந்தியரிடமும் தனியாக விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றார்கள், அவர்களை அனுப்பிய ஏஜெண்ட் யார் என்பது குறித்து கேட்டறியப்படுகிறது. அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் விமானத்தில் உடனடியாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள். உக்ரைன் போரின்போது அங்கு கல்வி பயின்ற இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
‘ஒற்றைத்துவத்தைத் திணிப்பதே பாஜகவின் செயல்திட்டம்’: “தலைநகர் டெல்லியில், யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் திமுக போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள். பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். >>விரிவாக வாசிக்க
சீமானை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. >>விரிவாக வாசிக்க
“அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்” - இந்து முன்னணி: “இந்துக்கள் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கறை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்,” என்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
சாதிவாரி கணக்கெடுப்பு: அரசு மீது விஜய் சாடல்: “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
ஈரோடு கிழக்கில் பதிவான வாக்குகள் எவ்வளவு? - நாதக கேள்வி: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், “இது தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் குறித்த முழு விபரத்தையும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
கிருஷ்ணகிரி அதிர்ச்சி சம்பவம் - பெற்றோர் குற்றச்சாட்டு: அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் குழுக்களில் அரசியல் தலையீட்டை தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி காட்சி பொருளாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 13 வயதுள்ள மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சில மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐஜி.பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவை அரசு அமைத்து விசாரணைக்கு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தற்போது, கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவியை, அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள், கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் கண்காணிப்புக் குழு, மாணவர் மனசு புகார் பெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் பிப்ரவரி 8-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.