அமிர்தசரஸ்: 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு ராணுவ விமானம், சற்று நேரத்துக்கு முன்பு பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அமெரிக்க ராணுவ விமானம் C-17, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 205 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுபற்றிய முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி உளள்து. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
» நான் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவன்; நெருப்போடு விளையாடாதீர்கள் - மாநிலங்களவையில் வைகோ!
» நாம் சீனாவுக்குத்தான் வரி செலுத்துகிறோம்: மக்களவையை அதிரவைத்த ராகுல் காந்தி
அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ”அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை 5,000 பேர் ராணுவ சிறப்பு விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாக இந்தியாவைச் சேர்ந்த 205 பேரை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். எந்த நாடும் ஏற்காத சட்டவிரோத குடியேறிகளை எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கும் எல் சல்வடார் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது” என்று தெரிவித்தன.