புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் தொழில்துறை பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் தொழில் துறை தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: மத்திய பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
» 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்: பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!
அதேபோல, புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.