புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.தொடர்ந்து 8-வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்ததால் எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்தனர். அவர்கள் அவ்வப்போது அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதி அமைச்சகத்தின் வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மரபு ரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.