சோஹோ நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு பதவி விலகல்

By KU BUREAU

புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. சோஹோ கார்ப்பரேஷன் சிஇஓ பதவியிலிருந்து விலகி தலைமை விஞ்ஞானி என்ற புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது, ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் & டி) முன்முயற்சிகளுக்கு மிக பொறுப்பானதாக இருக்கும்.

எங்களது இணை நிறுவனர் சைலேஷ் குமார் தவே சோஹோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். அதேபோன்று மற்றொரு இணை நிறுவனர் டோனி தாமஸ் அமெரிக்க சோஹோ நிறுவனத்தை வழிநடத்துவார். மேலும், மேனேஜ்என்ஜின் பிரிவுக்கு ராஜேஷ் கணேசனும், http://Zoho.com பிரிவுக்கு மணி வேம்புவும் தலைமை தாங்குவார்கள்.

எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முற்றிலும் R&D சவாலை நாம் எவ்வளவு சிறப்பாக வழிநடத்துகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது. எனவே, எனது புதிய பணியை ஆற்றலுடன், வீரியத்துடனும் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப பணிகளுக்கு திரும்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சியை தொடர்வதோடு, ஏஐ-யின் சமீபத்திய முக்கிய மேம்பாடு உட்பட பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி பணியில் முழுநேரம் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சோஹோ கிளவுட்-அடிப்படையிலான பிசினஸ் சாப்ட்வேர் நிறுவனம். இதன் பெரும்பாலான பங்குகள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது 2 உடன் பிறந்தவர்களின் வசம் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE