மும்பை: மகாராஷ்டிராவின் புனே நகரில் இதுவரை 73 பேருக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன் நோய்' என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய நோய்களில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோமும்' ஒன்றாகும். மகாராஷ்டிராவின் புனே நகரில் அண்மைகாலமாக இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் 73 பேர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். நோயாளிகளால் எழுந்து நடக்க முடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குதிங்காலில் வலி ஏற்படும். அதன்பிறகு பாதம் முழுவதும் வலி பரவும். இதன்பிறகு கால்கள், பின்னர் உடல் முழுவதும் வலி பரவும். இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புனே நகரில் 73 பேர் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொற்று நோய் கிடையாது. எனினும் கேபிலோக்பாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியா தொற்று காரணமாக புனே மக்களுக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். டெங்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் இந்த நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். தடுப்பூசி, அறுவைச் சிகிச்சை காரணமாகவும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
» ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க யுஎஸ் உச்ச நீதிமன்றம் அனுமதி
» சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்
பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஐசிஎம்ஆர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வக அறிக்கை கிடைத்த பிறகே தெளிவான பதில் கிடைக்கும். தற்போதைய நிலையில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை மற்றும் இம்யூனோகுளோபுலின் சிகிச்சை அளித்து வருகிறோம். உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் நோயாளி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
பொதுவாக 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோய் முற்றினால் பக்கவாதம், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான நபர்கள் 3 வாரங்களில் முழுமையாக குணமாகி விடுவார்கள். சிலருக்கு ஓராண்டு வரைகூட பாதிப்புகள் நீடிக்கலாம். நோயாளி குணமான பிறகு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன், ஜூலையில் தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 180 பேருக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டில் 90 நாட்கள் மருத்துவ அவசர நிலை அமல் செய்யப்பட்டது. தேவைப்பட்டால் புனேவில் மருத்துவ அவச நிலை அமல் செய்யப்படும்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் புனேவுக்கு வந்துள்ளனர். அந்த குழுவினர் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் புனே நகரின் 7,200 வீடுகளில் நேரடியாக கள ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.