மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்:  8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்!

By KU BUREAU

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசு, தனது ஊழியர்களின் சம்பள அமைப்பை திருத்தியமைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையத்தை அமைக்கிறது. இது சம்பள அமைப்பை திருத்துவதோடு மட்டுமல்லாமல், அவை ஓய்வூதிய கொடுப்பனவுகளையும் தீர்மானிக்கின்றன. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை திருத்தியமைக்க 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது சம்பளக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, 7-வது சம்பள ஆணையம் 2016 இல் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் 2026 இல் முடிவடையும் நிலையில், புதிய ஊதிய ஆணையம் அமைப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE