திருப்பதி: கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கோயில் நிர்வாகிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். திருப்பதியில் விஐபிகள் மீதான கவனத்தை வளர்ப்பதன் மூலம் சாமானிய பக்தர்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வைகுண்ட தரிசனம் டோக்கன் விநியோகத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்த பைராகிபட்டா என்ற இடத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், “சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி வேவஸ்தானம் அதன் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகு முறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்.” என்றார்.
மேலும், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், கோவில் நிர்வாகிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பக்தர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என்றும், கூட்டத்தை நிர்வாகிப்பதில் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில் 8 இடங்கள், திருமலையில் ஒரு இடத்தில் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இலவச டோக்கன் பெறுவதற்காக திருப்பதியில் ஏற்பாடு செய்திருந்த 8 இடங்களிலும் புதன்கிழமை காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். பாதுகாப்புக்கும் 3,000 போலீஸார் போடப்பட்டிருந்தனர்.
» அந்தமானில் வாழும் ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
» ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும்: பிரியங்காவுக்கு கங்கனா ரனாவத் அழைப்பு
இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் டோக்கன் வாங்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ஒரே நேரத்தில் வரிசைகளில் நுழைய ஆரம்பித்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி, எம்ஆர் அரசு பள்ளி, பூதேவி காம்ப்ளக்ஸ், ராமசந்திரா புஷ்கரணி ஆகிய 4 இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத் திணறி 4 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.
இவர்களை திருப்பதி அரசு மருத்துவமனையிலும், திருப்பதி தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். நெரிசலில் 3 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா.