திருப்பதியில் 6 பக்தர்கள் பலி - மீண்டும் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்!

By KU BUREAU

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.

ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல் கிடைத்துள்ளது.

அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19ம் தேதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE