‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும்: பிரியங்காவுக்கு கங்கனா ரனாவத் அழைப்பு

By KU BUREAU

இந்தியாவின் அவசரநிலை பிரகடனத்தை பிரதிபலிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்தை காண வருமாறு காங்கிரஸ்எம்பி பிரியங்கா காந்திக்கு நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 1975-1977 இடையிலான 21 மாதங்களில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை இந்தியாவின் இருண்ட காலம் என எதிர்க்கட்சிகள் இன்றளவும் விமர்சித்து வருகின்றன.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எமர்ஜென்சி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இந்திராகாந்தி வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்தை காண வருமாறு பிரியங்கா காந்திக்கு கங்கனா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உண்மையில் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்து எமர்ஜென்சி படத்தை பார்க்க அழைப்பு விடுத்தேன். அவர் மிகவும் கருணையானவர். அதனால்தான் அவர் உடனே படத்தை பார்க்கலாம் என ஒப்புக்கொண்டார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய பெண் ஆளுமையின் உணர்வை வெளிப்படுத்துவது. எனவே அதிக கவனத்துடன் நிறைய விஷயங்களை இதற்காக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்திரா காந்தி அனைவராலும் விரும்பப்படும் தலைவர். எமர்ஜென்சியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் இந்திரா காந்தி அனைவராலும் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர். ஒரு பெண்ணாக மூன்று முறை பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தியுள்ளார். இது, நகைச்சுவையான காரியம் கிடையாது. இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE