துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசியின் அறிவிக்கைக்கு எதிராக போராட்டம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By KU BUREAU

துணைவேந்தர்கள் நியமனம் குறித்த புதிய விதிமுறைகள் தொடர்பாக யுஜிசி தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டதற்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழகம் முன்னெடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது.

தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழகம் நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யுஜிசி வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்கமுடியாது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழகம் முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE