பிஹார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வை ரத்து செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிஹாரில் கடந்த மாதம் நடைபெற்ற பிஹார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதனால் இதை ரத்து செய்யக்கோரி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் போராட்டம் நடத்தினர். ஜன் சுராஜ் என்ற புதிய கட்சி தொடங்கிய தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோரும் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 2-ம் தேதி தொடங்கினார். பாட்னாவில் கர்தானி பாக் தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்த பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனால் சட்டவிரோதமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறி பிரசாந்த் கிஷோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அதில் எந்த தவறான செயலிலும் பிரசாந்த கிஷோர் ஈடுபட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் ஜாமீனை ஏற்க அவர் மறுத்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அவர் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் கிஷோரின் உடல் நிலை மோசமடைந்தது. 5 நாள் உண்ணாவிரதம் காரணமாக அவர் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிரஷாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.