ஹெச்எம்பி​ பரவலை தடுப்பது குறித்து ​விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்​: ​மாநில அரசுகளுக்​கு மத்திய அரசு உத்தரவு

By KU BUREAU

ஹெச்எம்பிவி வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ (ஹெச்எம்பிவி) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஹெச்எம்பிவி வைரஸ் பரவி உள்ளது. அமெரிக்காவில் கடந்த டிசம்பர் இறுதியில் 300 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், முதியோர் ஆவர். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்எம்பிவி வைரஸ் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா,மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 8 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

புதிய வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் பரவவில்லை. சில இடங்களில் மட்டும் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு முதல் உலக அளவில் ஹெச்எம்பிவி வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லை. எனினும் மாநில அரசுகள், வைரஸ் தடுப்பு தொடர்பான கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்.

சுவாசக் கோளாறுகள் தொடர்பான வைரஸ்களை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. புதிதாக பரவும் ஹெச்எம்பிவி வைரஸ் குளிர்காலத்தில் அனைத்து வயதினருக்கும் தொற்றுகளை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயை தொடக்கூடாது. வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இருமல் மற்றும் தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் கருத்து: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கூறும்போது, “ஹெச்எம்பிவி வைரஸ் கடந்த 2001-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. ஹெச்எம்பிவி வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை" என்று தெரிவித்தார்.

இந்திய சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது: கரோனா வைரஸ் போன்று ஹெச்எம்பிவி வைரஸும் உருமாற்றம் அடையும். ஆனால் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து கிடையாது. இந்த வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், நாள்பட்ட நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவுக்கு பின்பற்றிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஹெச்எம்பிவி வைரஸை குணப்படுத்த மருந்துகளோ, சிகிச்சை முறையோ இல்லை. பொதுவான மருத்துவத்தின் மூலமே ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரளாவில் கடந்த ஆண்டு 20 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. வரும் மார்ச் மாதம் வரை ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று பாதிப்புகள் நீடிக்கக்கூடும். இவ்வாறு சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE