நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு

By KU BUREAU

நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்த பல்வேறு ரயில் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் நரேநதிர மோடி பேசியதாவது: நமது நாட்டில் அதிவேக ரயில் போக்குவரத்துத்துறையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், நமது நாட்டின் ரயில்வே அமைப்பில் இத்தகைய முன்னேற்றங்கள் எனக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

மூன்று நாட்களுக்கு முன்பு, நான் ஒரு வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வந்தே பாரத் ரயிலின் புதிய ஸ்லீப்பர் வகை ரயில், சோதனையின்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டதை அந்த வீடியோவில் பார்த்தேன். இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான வளர்ச்சி. இது ஆரம்பம் தான். நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நமது நாட்டில் தற்போது 1000 கிலோமீட்டருக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் நெட்வொர்க் உள்ளது. தற்போது தெலங்கானா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள், ரயில் போக்குவரத்து இணைப்பில் பெரும் மைல்கற்களாக அமைந்துள்ளன. இது நமது நாட்டின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. இதுதான் சப் கா சாத், சப் கா விகாஸ் (அனைவரின் ஒத்துழைப்பு, அனைவரின் வளர்ச்சி) ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE