உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது

By KU BUREAU

பிஹாரில் பிபிஎஸ்சி தேர்வு முறைகேடுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வு கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதற்கான வினாத்தாள் முன்கூட்டிய கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பிபிஎஸ்சி முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மனு தாக்கல் செய்ய உள்ளதாக கிஷோர் அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். அங்கிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கிஷோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேநேரம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன் என்ற நிபந்தனை ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு உத்தரவிடப்பட்டது. இதை ஏற்க கிஷோர் மறுப்பு தெரிவித்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து ஜன் சுராஜ் கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரசாந்த் கிஷோரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கிஷோரை பார்க்க கூடியிருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE