வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: டெல்லியில் மூடுபனியால் 200 விமான சேவை பாதிப்பு

By KU BUREAU

புதுடெல்லி: மூடுபனி காரணமாக டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள், 60 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக அதிகாலை நேரத்தில் மூடுபனியால் சாலை, ரயில், விமான போக்குவரத்து மோசமாக பாதிக்கப்படுகிறது.

மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 138 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. இதேபோல அந்த விமான நிலையத்தில் 58 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 4 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் மட்டும் 900 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல மூடுபனி காரணமாக டெல்லி ரயில் ரயில் நிலையங்களில் நேற்று 60 விரைவு ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், வந்து சேர வேண்டிய ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, “தலைநகர் டெல்லியில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 மணி வரை மூடுபனி படர்ந்து காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியவில்லை. ரயில் தண்டவாளங்களிலும் இதேநிலை காணப்படுகிறது. மூடுபனியால் விமானங்கள் புறப்படுவது, தரையிறங்குவதில் சிக்கல் நீடிக்கிறது" என்று தெரிவித்தனர்.

காஷ்மீர், இமாச்சல பிரதேசம், லடாக், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார், பஞ்சாப், ஹரியானா, மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாநிலங்களிலும் சாலை, ரயில், விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE