ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் 17-ம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்ட ‘முபாரக் மன்சில்’ எனப்படும் அரண்மனை புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ்ப்பெற்ற தாஜ்மகால் உள்ளது. யமுனை நதிக் கரையோரம் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. கடந்த 17-ம் நூற்றாண்டில் ‘முபாரக் மன்சில்’ என்ற அரண்மனை முகலாயர்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனை அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். முபாரக் மன்சில் குறித்து ஆஸ்திரியாவின் பிரபல வரலாற்று ஆசிரியர் எப்பா கோச் தனது ‘தி கம்பிளீட் தாஜ் மகால் அண்ட் தி ரிவர்பிரன்ட் கார்டன்ஸ் ஆப் ஆக்ரா’ என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்த அரண்மனையில் அவுரங்கசீப், ஷாஜகான், ஷுஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் தங்கியதாக கூறுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1902-ம் ஆண்டு இந்த முபாரக் மன்சில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷாரின் அலுவலகமாக அந்த அரண்மனை மாற்றப்பட்டது. மேலும், ‘தாரா நிவாஸ்’ என்றும் அழைக்கப்பட்டது.
» ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளை கட்டி உள்ளேன்: டெல்லி நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பேச்சு
» காங்கிரஸ் சீரமைப்பு பணி தொடக்கம்; பொறுப்புகளுக்கு இணையவழி விண்ணப்பம்: செல்வப்பெருந்தகை தகவல்
இந்நிலையில், முபாரக் மன்சிலை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக ஆட்சேபனைகளை கேட்டு உ.பி. மாநில தொல்லியல் ஆய்வுத் துறை கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதன்பின்னர், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து வந்த அதிகாரிகள், முபாரக் மன்சிலை பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு முபாரக் மன்சிலை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது.
புல்டோசர்கள் மூலம் அந்த அரண்மனையை இடித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் இடிபாடுகள் கொண்டு செல்லப்பட்டன. தற்போது முபாரக் மன்சிலின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறும்போது, “பில்டர் ஒருவருடன் போலீஸார், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த அரண்மனையை இடித்துவிட்டனர்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆட்சியர் உத்தரவு: இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி கூறுகையில், “முபாரக் மன்சில் குறித்த பிரச்சினை எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் அந்த இடத்தில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.