ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளை கட்டி உள்ளேன்: டெல்லி நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பேச்சு

By KU BUREAU

எனக்காக அரண்மனை கட்டவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஏழை குடும்பங்களுக்காக 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள், டெல்லி நௌரோஜி நகரில் உலக வர்த்தக மையம், சரோஜினி நகரில் 2,500 வீடுகள், டெல்லி துவாரகாவில் சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.

டெல்லி அசோக் விஹாரில் நேற்று நடைபெற்ற விழாவில் புதிய வீடுகள், கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதன்படி சூரஜ்மல் விஹாரில் கல்வி வளாகம், துவாரகாவில் ஒரு கல்வி வளாகம், நஜாஃப்கரின் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரி ஆகியவை கட்டப்பட உள்ளன.

நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆடம்பர வீடு குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார். கேஜ்ரிவால் வசித்த அரசு இல்லம் ரூ.171 கோடியில் புதுப்பிக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “எனக்காக சீஷ் மஹால் (முகலாய மன்னர் ஷாஜகான் லாகூரில் கட்டிய அரண்மனை) கட்டவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை குடும்பங்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

விழாவில் அவர் தொடர்ந்து பேசியதாவது: டெல்லி அசோக் விஹாரில் ஏழை குடும்பங்களுக்காக 1,675 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. அவசரநிலை காலத்தின்போது அசோக் விஹார் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்தேன். அந்த நாட்களை மறக்க முடியாது. வரும் ஆண்டுகளில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் டெல்லியில் புதிதாக 3,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். இதற்காக ஏழைகள், நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்க கட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடுத்தர வர்க்க குடும்பத்தினர் புதிய வீடுகள் வாங்க, கட்ட மானிய உதவி அளிக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய கல்வி கொள்கை அமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் சிபிஎஸ்இ முக்கிய பங்காற்றி வருகிறது. இதேபோல உயர் கல்வித் துறையில் டெல்லி பல்கலைக்கழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இரு அமைப்புகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் டெல்லியில் வாழும் சுமார் 75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பலன் அடைந்து வருகின்றனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஜன் அவுஷதி மருந்தகங்கள் செயல்படுகின்றன. இந்த மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரதமரின் சூரிய வீடு திட்டத்தின் கீழ் ஏராளமான வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சமூக சேவகர் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி சில ஊழல்வாதிகள் (ஆம் ஆத்மி) டெல்லியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். டெல்லியில் மதுபான கடை உரிமம் ஊழல், பள்ளி ஊழல், மருத்துவமனை ஊழல் என அடுத்தடுத்து பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊழலுக்கு எதிராக டெல்லி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

டெல்லி யமுனை நதியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த நதியில் மாசு அதிகரித்து வருகிறது. ஆனால் யமுனை நதி குறித்து ஆட்சியாளர்களுக்கு துளியும் அக்கறை இல்லை. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பாரதம் தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது. புதிதாக பிறந்துள்ள 2025-ம் ஆண்டில் 3-வது இடத்தை பாரதம் எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE