கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் இருந்ததைப் போலவே மதவழிபாட்டு தலங்களின் தன்மையை மற்றும் உரிமையை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மதவழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது. குறிப்பாக, ஒரு சமயத்தினரின் பழைய வழிபாட்டு தலங்கள் மீது யாரும் புதிதாக உரிமை கோர முடியாது.
இந்த சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடக்கோரி ஓவைசி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரைப் போலவே பல்வேறு மத அமைப்புகளும் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த நிலையில், ஓவைசி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
» பிபிஎஸ்சி தேர்வு ரத்து கோரி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதம்: 2 நாட்களுக்கு பின் தீவிர போராட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அதனுடன் ஓவைசியின் புதிய மனுவும் சேர்த்து ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி இதுதொடர்பான விசாரணை நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.