புதுடெல்லி: இணையவழி குற்றங்களுக்கு வாட்ஸ்-அப் சமூக வலைதளத்தை மோசடியாளர்கள் அதிகம் பயன்படுத்துவதாக மத்திய உள் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-24 அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், வாட்ஸ்-அப் மூலம் இணைய மோசடி நடைபெற்றதாக 43,797 புகார்கள் பெறப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக, டெலிகிராம் செயலி (22,680), இன்ஸ்டாகிராம் செயலி (19,800) வழியாக இணைய மோசடி நடைபெற்றதாக புகார்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இணையவழி குற்றங்களில் ஈடுபடும் மோசடியாளர்கள் கூகுள் சேவை தளங்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். வெளிநாட்டிலிருந்து செயல்படும் மோசடியாளர்களுக்கு கூகுள் விளம்பர தளம் மோசடியில் ஈடுபடுவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
‘பிக் பட்சரிங் மோசடி’ அல்லது ‘முதலீட்டு மோசடி’ என அழைக்கப்படும் இந்த மோசடி, ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். அத்துடன் பெரிய அளவிலான பணமோசடி மற்றும் இணைய அடிமைத்தனத்தை உள்ளடக்கியது. வேலையில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் பணம் தேவை உள்ள மக்கள்தான் இவர்களின் இலக்காக உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் இணையவழி மோசடியில் சிக்கி அதிக பணத்தை இழக்கின்றனர். சிலர் கடன் வாங்கியும் இந்த மோசடி மூலம் பணத்தை இழந்துள்ளனர்.
» புல்மேடு, எருமேலியில் இருந்து வனப் பாதையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து
» திருப்பூர் அருகே சாலை வசதி இல்லாததால் ரயில் தண்டவாளம் வழியாக எடுத்து செல்லப்பட்ட சடலம்
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகள் மற்றும் இணையவழி மோசடி செய்பவர்களின் ரகசிய தகவல் மற்றும் சமிக்ஞைகளை பரிமாறிக்கொள்வதற்காக இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையமான I4C, கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. இவ்வாறு உள் துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.