மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு பற்றி சர்ச்சையை உருவாக்கும் காங்கிரஸ்

By KU BUREAU

மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு பற்றி காங்கிரஸ் கட்சி சர்ச்சையை உருவாக்குவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “நாட்டின் சிறந்த மகனும் முதல் சீக்கிய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நிகாம்போத் காட் பகுதியில் நடைபெற்றது. இதன்மூலம் மத்திய அரசு அவரை அவமதித்துள்ளது” என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, மன்மோகனுக்கு நினைவிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மன்மோகன் சிங்கின் பணிகளை நாங்கள் எப்போதும் பாராட்டி உள்ளோம். அவரிடமிருந்து உத்வேகம் பெற்றுள்ளோம். இன்றுகூட (நேற்று) அவருடயை அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டபோது எங்கள் கட்சியினர் உடன் இருந்தனர். ஆனால் காங்கிரஸார் இல்லை. மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டுவது உறுதி. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் சர்ச்சையை உருவாக்குகிறது. அக்கட்சி இந்த நாட்டிலிருந்தும் இண்டி கூட்டணியில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் உடலை கட்சி தலைமையகத்தில் வைத்து அஞ்சலி செலுத்த காங்கிரஸ் கட்சி அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில், “டாக்டர் மன்மோகன் சிங், இணையற்ற தலைவர். கண்ணியம் மற்றும் அறிவாற்றல் கொண்ட ஒரு ராஜதந்திரி. அவருடைய இறுதி பயணத்தில் காங்கிரஸ் கட்சி சர்ச்சையை உருவக்க முயல்வது வருத்தமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE