மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம்: தலைவர்கள் மரியாதை! 

By KU BUREAU

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் (டிச.26) இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 9.51 மணி அளவில் காலமானார்.

இதையடுத்து, டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுரும், காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்து கணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகம்போத் காட் பகுதிக்கு வருகை தந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தலைவர்களின் இறுதி மரியாதையை அடுத்து மன்மோகன் சிங்கின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு, சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், மகள்கள், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்தனர். பின்னர் மன்மோகன் சிங் உடலைச் சுற்றி கட்டைகள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பகல் 1 மணி அளவில் 21 குண்டுகள் முழுங்க முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE