புதுடெல்லி: அது 1991-ம் ஆண்டு ஜூன் மாதம். நெதர்லாந்தில் மாநாட்டை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மன்மோகன் சிங் ஓய்வெடுக்க படுக்கைக்கு சென்றார். நள்ளிரவில் மன்மோகன் சிங் மருமகனான விஜய் தங்காவுக்கு ஒரு போன்கால் வந்தது. எதிர்முனையில் பேசியவர் பி.சி. அலெக்ஸாண்டர். பி.வி. நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய நபர். மன்மோகன் சிங்கை எழுப்புமாறு விஜயிடம் அலெக்ஸாண்டர் கேட்டுக் கொண்டார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு மன்மோகன் சிங்கும், அலெக்ஸாண்டரும் சந்தித்தனர். அப்போது மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்கும் நரசிம்மராவின் திட்டம் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது மன்மோகன் யுஜிசி தலைவராக இருந்தார். அரசியல் அனுபவம் அவருக்கு சிறிதும் இல்லை. எனவே, அலெக்ஸாண்டர் சொல்வதை மன்மோகன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதுகுறித்து மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் எழுதிய புத்தகமான ‘‘ஸ்டிரிக்ட்லி பெர்சனல், மன்மோகன் & குர்சரண்’’ என்ற புத்தகத்தில் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘என்னை நிதியமைச்சராக நியமிப்பதில் ராவ் உறுதியாக இருந்துள்ளார். அதனால்தான் ஜூன் 21-ம் தேதி யுஜிசி அலுவலகத்தில் இருந்தபோது உடனடியாக ஆடைகளை மாற்றிக்கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது. பதவிப்பிரமாணம் செய்ய அணிவகுப்பில் நான் நின்றதைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம். இலாகா பின்னர் ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதியமைச்சராகப் போகிறேன் என்பதை ராவ் எனக்கு முன்னரே தெரிவித்துவிட்டார்’’ என்று கூறியுள்ளார்.
நள்ளிரவில் வந்த அந்த ஒரு போன் கால் இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே மாற்றியமைக்க காரணமாக அமைந்துவிட்டது. விலைவாசி உயர்வு, அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய பொருளாதாரம் இன்று உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என்றால் அதற்கு மன்மோகன் சிங் அமைத்து கொடுத்த பாதை மிக முக்கியமானது என்பதை மாற்று அரசியல் கட்சியினராலும் மறுக்க இயலாது.