நாட்டில் விலைவாசி உயர்வால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆனால், மத்திய அரசோ கும்பகர்ணன் போல் தூங்குகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி கிரி நகரில் உள்ள காய்கறி சந்தைக்கு அண்மையில் ராகுல் காந்தி சென்று, அங்கு வந்த பெண்களுடன் கலந்துரையாடினார். உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் படும் அவதியும், அவர்கள் அடையும் இன்னல்களை பற்றியும் பெண்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். இதுதொடர்பான வீடியோவையும் தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் காய்கறி சந்தைக்குச் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது, சாமானியர்களின் நிதிநிலை எவ்வாறு மோசமடைந்து வருகிறது என்பதை அறிந்தேன். பணவீக்கம் எவ்வாறு அனைவரின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை அறிய விற்பனையாளர்களிடம் உரையாடினேன்.
நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசியால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அன்றாட தேவைகளின் சிறு விஷயங்களில்கூட மக்கள் சமரசம் செய்துவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
புல்லட் ரயில் கொண்டு வருவதைப் பற்றிப் பேசும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, புல்லட் ரயிலின் வேகத்தை விட வேகமாக உயர்ந்துவரும் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மக்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பூண்டு, பட்டாணி, காளான் மற்றும் பிற காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவ்வாறு உயர்ந்துகொண்டே சென்றால் சாமானியர்கள் என்ன சாப்பிடுவார்கள், எதைச் சேமிப்பார்கள் என்று யோசிக்க வேண்டி உள்ளது.
மக்களின் வருமானம் தேங்கி நிற்பதும், பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துக்கொண்டே செல்வதுமாக உள்ளது. சேமிப்பது என்பது மக்களிடையே சாத்தியமற்றதாகி விட்டது. பணவீக்கத்தின் விளைவை மக்கள் உணர்ந்தால், அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
ஒருகாலத்தில் ரூ.40-ஆக இருந்த பூண்டு விலை தற்போது ரூ.400-ஆக உயர்ந்துள்ளது. பூண்டின் விலை தங்கத்தை விட மலிவாக இருக்கவேண்டும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசு கும்பகர்ணன் போல் தூங்குகிறது.
வணிகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது. எனவே நாம் ஒரு சமநிலையை அடைய வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.