பஞ்சாபில் போலீஸ் நிலைகள் மீது கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 3 காலிஸ்தான் தீவிரவாதிகள், உ.பி.யில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் 2 போலீஸ் நிலைகள் மீதும் அமிர்தசரஸ் நகரில் ஒரு காவல் நிலையம் மீதும் அண்மையில் கையெறிகுண்டு வீசி அடுத்தடுத்து தாக்குல் நடத்தப்பட்டது. எனினும் இதில் போலீஸார் எவரும் காயம் அடையவில்லை. இந்த தாக்குதலில் தொடர்புடைய மூவரை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் உ.பி.யின் பிலிபித் மாவட்டம், பூரன்பூர் பகுதியில் புதிதாக கட்டுப்பட்டு வரும் ஒரு பாலத்தில் இந்த 3 நபர்களும் நேற்று அதிகாலையில் சுற்றி வளைக்கப்பட்டனர். பிலிபித் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இவர்களை பஞ்சாப் மற்றும் பிலிபித் மாவட்ட போலீஸார் சுற்றிவளைத்து, கைது செய்ய முயன்றனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மூவரும் படுகாயம் அடைந்தனர். பிறகு இவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை இயக்குநர் கவுரவ் யாதவ் கூறுகையில், “கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'காலிஸ்தான் ஜிந்தாபாத் ஃபோர்ஸ்' அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள், குர்விந்தர் சிங், வீரேந்திர சிங், ஜசன்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாகிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளை போலீஸார் கைப்பற்றினர். இந்த மூவரும் பஞ்சாபில் அண்மையில் போலீஸ் நிலைகள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள். தாக்குதல் தொடர்பான ஒட்டுமொத்த திட்டத்தையும் அறிய மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
» ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும்: இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு கோரிக்கை
» தமிழகத்தில் விரைவில் 1,000 மக்கள் மருந்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்