புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போதைப் பொருள் கடத்தல் நபரை, தியேட்டருக்குள் சுற்றிவளைத்து மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர்.
புஷ்பா திரைப்படத்தில் வரும் கதாநாயகன் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவார். இவரது படத்துக்கு உண்மையான கொள்ளையர்களும் ரசிகர்களாக உள்ளனர். மகாராஷ்டிராவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் விஷால் மேஷ்ரம். இவர் மீது இரண்டு கொலை உட்பட மொத்தம் 27 வழக்குகள் உள்ளன. இவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.
விஷால் மேஷ்ரம் கடந்த 10 மாதங்களாக, தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். சமீபத்தில் வெளியான புஷ்பா -2 திரைப்படத்தை பார்க்க விஷால் மேஷ்ரம், ஆர்வமாக இருப்பதாக போலீஸாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இவர் புதிய எஸ்யுவி வாகனம் ஒன்றில் வலம் வருவதை சைபர் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் விஷால் மேஷ்ரம், புஷ்பா-2 படம் பார்க்க நாக்பூரில் உள்ள சினிமா தியேட்டருக்கு கடந்த வியாழன் அன்று இரவு நேர காட்சிக்கு சென்றுள்ளார். அவரது வாகனத்தை தியேட்டருக்குள் கண்டுபிடித்த போலீஸார், விஷால் மேஷ்ரம் தப்பிச் செல்லாமல் இருக்க அதன் டயர்களை பஞ்சர் ஆக்கினர். படம் முடியும் நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் மேஷ்ரம் மூழ்கியிருந்தார். அந்த நேரம் தியேட்டருக்குள் புகுந்த போலீஸார் விஷால் மேஷ்ரமை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதை பார்த்து சினிமா தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் திகைத்தனர். அவர்களை தொடர்ந்து படம் பார்க்கும்படி கூறிவிட்டு விஷால் மேஷ்ரமை மட்டும் போலீஸார் தங்களுடன் அழைத்துச் சென்றனர். சினிமாவில் கடத்தலில் ஈடுபடும் கதாநாயகரை ரசித்த ரசிகர்களுக்கு, தியேட்டருக்குள் உண்மையான கடத்தல் ஆசாமி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.
» பஞ்சாபில் 4 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
» தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்க சதி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு