தேர்தல் ஆணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்பின் நேர்மையை அழிக்க மேற்கொள்ளப்படும் சதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் வீடியோ பதிவுகள், வாக்குப்பதிவு குறித்த முக்கிய ஆவணங்களை மனுதாரர் மெமூத் பிரச்சாவுக்கு வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முக்கிய ஆவணங்களை பொதுவெளியில் பகிர தடை விதிக்கும் வகையில் ஆணையத்தின் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய விதிகளில் மோடி அரசு திருத்தம் செய்திருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி ஆகும்.
இதற்கு முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கினர். இப்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் ஆணையத்தின் முக்கிய ஆவணங்களை வழங்க தடை விதிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
» அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் டிச.27, 28-ம் தேதிகளில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
» ரூ.1.5 கோடி இணையதள சேவை கட்டண நிலுவை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஸ் - அண்ணாமலை மோதல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. வாக்காளர்கள் முறைகேடாக நீக்கப்படுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என்று காங்கிரஸ் சார்பில் பலமுறை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் மழுப்பலான பதிலை மட்டுமே அளித்து வருகிறது.
தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிகளில் திருத்தம் செய்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.