கோயில் - மசூதி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்த பின்னர், கோயில்- மசூதி விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று கருதப்பட்டது.

ஆனால், வாராணசியின் கியான்வாபி, மதுராவின் ஷாயி ஈத்கா, ம.பி. மாநிலத்தின் போஜ் சாலா மவுலா ஆகிய மசூதிகளுக்கு எதிராக வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. உ.பி.யின் சம்பல் ஜாமா மசூதி வழக்கில் கள ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இங்கு ஆய்வின் போது நடந்த கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து உ.பி.யில் கோயில்களை இடித்து மேலும் பல மசூதிகள் மற்றும் அஜ்மீர் தர்கா கட்டப்பட்டதாக புகார்கள் கிளம்பின. ஆனால் கோயில் - மசூதி தொடர்பாக புதிய வழக்கு எதையும், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் கீழ் விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது

இந்நிலையில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், புனேவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபின் கோயில் மசூதி மீதான புதிய விவகாரங்களுக்கு இனி இடமில்லை. இந்துக்களின் தலைவர்களாக தம்மை காட்டிக் கொள்ள சிலர் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர்” என்று கண்டித்தார்.

இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தேசிய தலைவர் மவுலானா முப்தி சஹாபுதீன் ரிஜ்வீ கூறுகையில், “மசூதி களுக்கு எதிரான வழக்குகளால், இந்து - முஸ்லிம்களுக்கு இடையே உள்ள சகோதரத்துவம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் நல்ல கருத்தைக் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளால் முஸ்லிம்கள் அமைதியின்றி இருப்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் உணர்ந்துள்ளார். இதே பிரச்சினைகளால் பிரதமர் மோடியின் பெயரும் சர்வதேச அளவில் களங்கப்படும் என்பதை அவர் புரிந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் ஷியா தனிச்சட்ட வாரிய பொதுச் செயலாளர் மவுலானா யாசூப் அப்பாஸ். மற்றொரு முஸ்லிம் தலைவர் கல்பே சிப்தே நூரி மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் இக்ரா சவுத்ரி, அப்சல் அன்சாரி மற்றும் மொஹிபுல்லா நத்வீ உட்பட பலர் மோகன் பாகவத்தின் கருத்தை வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE